நெல்லையப்பர் கோவிலில் வேணுவன நாதர் திருவிளையாடல் நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் வேணுவன நாதர் திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-12 23:05 GMT
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி -அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர திருவிழாவின் 4-வது நாளான நேற்று வேணு வனத்தில், வேணுவன நாதர் சுயம்புவாக உருவெடுத்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி சன்னதி பின்புறம் அமைந்துள்ள தலத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முழுதும் கண்ட ராம கோன், வெள்ளி கலயத்துடன் அரண்மனைக்கு பால் எடுத்து செல்லும் நிகழ்வும், கால் இடறி மூங்கில் முகட்டில் பால் கொட்டும் நிகழ்வும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ராம பாண்டிய மன்னன் அனுமதியுடன் மூங்கிலை வெட்டும்போது ரத்தம் பீறிடும் நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அரண்மனைக்கு பால் கொண்டு சென்ற முழுதும் கண்ட ராம கோன் மற்றும் முழுதும் கண்ட ராம பாண்டிய மன்னனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வேணு வனத்தில் உருவான சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில்  சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி மாலை 6 மணிக்கு பங்குனி உத்திரம் அன்று பாண்டிய மன்னருக்கு சுவாமி செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



மேலும் செய்திகள்