ஈரோடு மாநகரின் மத்தியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அரசுப்பள்ளி மாணவ- மாணவிகள்; கட்டிட பணி பாதியிலேயே நிற்பதால் அவதி

ஈரோடு மாநகரின் மத்தியில் கட்டிட பணிகள் பாதியில் நிற்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ- மாணவிகள் தவிக்கும் நிலையில் அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது.

Update: 2022-03-12 22:32 GMT
ஈரோடு
ஈரோடு மாநகரின் மத்தியில் கட்டிட பணிகள் பாதியில் நிற்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ- மாணவிகள் தவிக்கும் நிலையில் அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது.
மாநகராட்சி பள்ளிக்கூடம்
ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி. ரோட்டில் மாநகரின் மத்தியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியையாக கே.சுமதி என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூட வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த சமையல் அறை மற்றும் கழிவறைகளை அகற்றிவிட்டு புதிதாக கழிப்பறை, சமையல் அறை மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் ஒருவர் கட்டிட பணிகளை செய்ய அனுமதி பெற்றார்.
கட்டிடம் இடிப்பு
ஆனால் பணிகளை உடனடியாக தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதுமட்டுமின்றி, பள்ளிக்கூடத்தில் செயல்பாட்டில் இருந்த சமையல் அறை, கழிவறைகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடத்துக்கான தூண்கள் போடுவதற்கான குழிகள் வெட்டப்பட்டு அப்படியே போடப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு வகுப்புகள் தொடங்கிய பிறகு மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பணிகளை தொடங்க வைத்தனர். ஆனால், கட்டிட ஒப்பந்த பணத்தை மாநகராட்சி அதிகாரிகள் தரவில்லை என்று குற்றம்சாட்டி மீண்டும் பணியை நிறுத்திவிட்டு ஒப்பந்ததாரர் சென்று விட்டார். இந்தநிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் தினசரி பள்ளிக்கு வந்தனர்.
பாதுகாப்பற்ற கழிவறைகள்
கழிவறைகள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடத்துவது சவால் ஆனது. அப்போது ஈரோடு மாநகராட்சியின் நடமாடும் கழிவறைகள் பள்ளிக்கூடம் முன்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் பள்ளிக்கூட வளாகத்தில் தற்காலிக கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த கழிவறைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
அதே நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க சமையல் அறை இல்லாமல் சத்துணவு பணியாளர்கள் தவித்து வருகிறார்கள். இதுபற்றி ஒப்பந்ததாரரிடம் கேட்டால், மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டிவிட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ. கோரிக்கை
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்து பணிகள் பாதியில் நிற்பதை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மேல் தளம் கான்கிரீட் போடப்பட்டது. அத்துடன் பணி முடிக்கப்பட்டு அப்படியே நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாநகராட்சியின் 34-வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பள்ளிக்கூட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
போராட்டம் நடத்துவோம்
இதுபற்றி பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிக்கூடங்களில் எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி பள்ளிக்கூடமும் ஒன்று. இந்த பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோரை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்