சேலத்தில் இருந்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

சேலத்தில் இருந்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.

Update: 2022-03-12 22:03 GMT
சேலம்:
சேலத்தில் இருந்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.
ரேஷன் அரிசி கடத்தல்
சேலம் மாவட்டத்தில் இருந்து கோழிப்பண்ணைகளுக்கும், கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் அருகே கருப்பூர் அருகேயுள்ள காட்டுவளவு உப்பு கிணறு என்ற இடத்தில் குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாகவும், அந்த அரிசி மூட்டைகள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த தயாராக உள்ளதாகவும் போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தது.
35 டன் பறிமுதல்
இதையடுத்து துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர் நாகராஜன், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த குடோனில் இருந்து ஒரு லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு போலீசார் வருவதை அறிந்த 4 பேர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து குடோனில் சோதனை செய்தபோது, அங்கு  35 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவுடன் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி, தனி தாசில்தார் கணேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களும் விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த குடோன் அதேபகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கு சொந்தமானது. இதனால் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு 35 டன் ரேஷன் அரிசி கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி, 4 மோட்டார் சைக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்