சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி; வனக்குட்டைகளில் நீர் நிரப்பும் வனத்துறை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள வனக்குட்டைகளில் வனத்துறையினர் வாகனங்கள் மூலம் நீர் நிரப்பி வருகிறார்கள்.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள வனக்குட்டைகளில் வனத்துறையினர் வாகனங்கள் மூலம் நீர் நிரப்பி வருகிறார்கள்.
கடும் வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக வனக்குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் சேறும், சகதியுமான தண்ணீரை வனவிலங்குகள் குடித்து வருகின்றன. மாசடைந்த தண்ணீரை பருகும் வனவிலங்குகள் குடற்புழு நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
தண்ணீர் நிரப்பப்படுகிறது
இதை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் செயற்கை குட்டைகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தாளவாடி வனச்சரகத்தில் உள்ள சிக்கள்ளி வனப்பகுதியில் செயற்கை வனக்குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டையில் மினி லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் அருகே குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் உப்புக்கட்டியும் வைக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே செயற்கை குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் யானைகள், காட்டெருமைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வருகின்றன.