சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் இருந்து சூசையப்பர்பட்டினம் வழியாக சூரியமணல் செல்லும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (புறவழிச்சாலை) சாலை பணி நடைபெற்று வருகிறது. இதில் கரடிகுளம் கிராம மக்கள் விளை நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தராமல் சாலை பணி நடைபெறுவதால், அவர்கள் அந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களின் விளைநிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி கேட்டு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ஒப்பந்ததாரரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விளைநிலங்களுக்கு செல்ல தற்போது போட்டுள்ள நீர்வரத்து மதகை அடைத்துவிட்டு, கரடிகுளத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்ல நேரடியாக பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.