சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைந்த பண்ணாரி அம்மன்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு
சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைந்த பண்ணாரி அம்மனை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைந்த பண்ணாரி அம்மனை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பரிசல் மூலம்...
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் ஆகியோர் சப்பரத்தில் வீதி உலாவாக கோவிலில் இருந்து புறப்பட்டு பண்ணாரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு பண்ணாரி அம்மனின் சப்பர வீதி உலா சென்றது. பின்னர் அங்குள்ள அம்மன் கோவிலில் பண்ணாரி அம்மன் தங்க வைக்கப்பட்டது.
தண்டு மாரியம்மன் கோவிலை...
பின்னர் நேற்று காலை அக்கரை தத்தப்பள்ளி அம்மன் கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன் வீதி உலாவாக புறப்பட்டு உத்தண்டியூர், அய்யன்சாலை வழியாக ஒட்டரூர் பெருமாள் கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மேலும் தேங்காயை ஈடு காயாக தரையில் அடித்தும் அம்மனை வணங்கினர். பின்னர் அங்கிருந்து அம்மன் பகுத்தம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் வழியாக இரவு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு இரவு பண்ணாரி அம்மன் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
முன்னதாக சத்தியமங்கலம் எல்லையான கோம்புபள்ளத்தில் அம்மனுக்கு தாரை, தப்பட்டை முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அம்மனின் சப்பரத்துடன் வந்த பக்தர்கள் 110 பேருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து பண்ணாரி அம்மன் வரும் வழியான கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, வடக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் 1½ கிலோ மீட்டா் தூரத்துக்கு லாரிகள் மூலம் ரோட்டில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.