பிசிலே வனப்பகுதியில் ஒரே இடத்தில் பெய்யும் மழையும்... வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நீரும்...!!!
பிசிலே வனப்பகுதியில் ஒரே இடத்தில் பெய்யும் மழையும்... வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நீரும்...!!!
பரந்து விரிந்த இந்த பூமி இயற்கை வளங்களால் சூழப்பட்டுள்ளது. இயற்கை, கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். நீர், காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு என பஞ்சபூதங்களும் இயற்கையின் வளமாகும்.
இயற்கையின் விந்தை
நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவில் இருந்து குடிக்கிற நீர் வரை மனிதனுடைய அத்தியாவசிய தேவைகளுக்கும் இயற்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை நம்ப முடியாத பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
செயற்கையாக பல விஷயங்களை நாம் செய்தாலும், இயற்கையின் அழகிற்கு அது ஈடாகாது என்பது நிதர்சனமான உண்மை.
இதுபோல் தான் கா்நாடகத்திலும் இயற்கையின் விந்தை பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது ஒரே இடத்தில் பெய்யும் மழைநீர், வெவ்வேறு திசையில் பயணித்து வெவ்வேறு கடலில் கலக்கிறது. இந்த அதிசயத்தை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்....
ரிட்ஜ் பாயிண்ட்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மங்கனஹள்ளியில் பிசிலே வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இந்த பிசிலே வனப்பகுதியில் தான் அந்த இயற்கையின் விந்தை நடக்கிறது.
அதாவது, பிசிலே வனப்பகுதியில் ஒரு முகடு உள்ளது. அது ரிட்ஜ் பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. இது பிசிலே வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அந்த மலை முகடு பகுதியில் பெய்யும் மழையானது, வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் உண்மை தான். இங்கு பெய்யும் மழைநீர் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. அதாவது, அங்கு கிழக்கு நோக்கி மழை பெய்யும் போது வங்காள விரிகுடா நோக்கியும், மேற்கு நோக்கி மழை பெய்யும் போது அரபி கடல் நோக்கியும் தண்ணீர் செல்கிறது.
வங்காள விரிகுடா, அரபிக்கடல்
வடக்கு, தென் திசையை நோக்கி மழைநீர் செல்லும் பாதையை தீர்மானிக்கும் பகுதியாக அந்த ரிட்ஜ் பாயிண்ட் உள்ளது. இந்த மலைப்பகுதியில் மேற்கு நோக்கி மழை பெய்யும் போது,
அந்த மலையில் உள்ள நீரோடைகள் வழியாக குமாரதாரா ஆற்றில் கலந்து குக்கே சுப்பிரமணியா வழியாக நேத்ராவதி ஆற்றுடன் சங்கமித்து அந்த தண்ணீர் அரபி கடலுக்கு செல்கிறது.
இதேபோல், கிழக்கு நோக்கி மழை பெய்யும் போது, மலையில் உள்ள நீரோடைகள் வழியாக ஹேமாவதி நதியில் கலந்து, காவிரியுடன் இணைந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரி சென்று வங்காள விரிகுடாவில் அந்த தண்ணீர் கலக்கிறது.
சுற்றுலா பயணிகள் வியப்பு
இந்த அதிசயத்தை கவனித்த ஆங்கிலேயர்கள் அந்த மலை முகட்டில் ஒரு மேடை அமைத்து அங்கு ஒரு கல்லை நிறுவி அதில் ‘பே ஆப் பெங்கால்’, அரேபியன் சி’ என்று பொறித்து வைத்துள்ளனர். இன்றளவும் அந்த கல் அங்கு இருக்கிறது. பிசிலே பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் அந்த ரிட்ஜ் பாயிண்டை பார்த்து வியந்து செல்கிறார்கள்.
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவுக்கு சுற்றுலா செல்பவர்கள் பிசிலே பகுதிக்கு வந்து ரிட்ஜ் பாயிண்டை பார்த்து ரசித்துவிட்டு தான் செல்வார்கள்.
மழைநீர் ஓடும் திசையை குறிக்கும் அந்த முகட்டை பாதுகாக்க, மேைடயை சுற்றி சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கையின் அதிசயம் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. இதை பற்றி அறிந்த நீங்களும் இந்த அதிசயத்தை பார்க்க தயாராகிவிட்டீர்களா?. அதே வேளையில், அந்த இயற்கை வளங்களை பாதுகாப்பது மனிதனின் கடமை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.