‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
வர்ணம் பூச வேண்டும்
கோபி அக்ரகாரம் கிருஷ்ணன் வீதியில் வேகத்தடை உள்ளது. ஆனால் இந்த வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். எனவே வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
மரம் அகற்றப்படுமா?
திண்டலில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் விழும் நிலையில் மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான இந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திண்டல்.
வேகத்தடை வேண்டும்
அந்தியூர் குருவரெட்டியூர் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கொளத்தூர் மெயின்ரோடு உள்ளது. இந்த ரோட்டில் வேகத்தடை இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொளத்தூர் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எம்.ஜி.ஆர்.நகர்
ஆபத்தான குழி
ஈரோடு கருங்கல்பாளையம் கொங்கு நகரில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் அதன் அருகே தோண்டப்பட்ட குழியும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். முதியவர்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே தோண்டப்பட்ட குழியை மூடி குழாய் உடைப்பை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருங்கல்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து பங்களாபுதூர் செல்லும் ரோட்டில் தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் அருகே மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர், கோவை, மதுரை, வெள்ளக்கோவில், தாராபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, வாசுகி வீதி, அகில்மேடு வீதி வழியாக பஸ் நிலையத்துக்கு செல்கின்றன. ஏற்கனவே வாசுகி வீதியும், அகில்மேடு வீதியும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் பஸ் நிலைய பகுதியில் இருந்து அகில்மேடு, வாசுகி வீதிகளின் வழியாக கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே எதிர்புறத்தில் இருந்து வாகனங்கள் வருவதை தவிர்க்க வாசுகி வீதியையும், அகில்மேடு வீதியையும் ஒரு வழிப்பாதையாக அறிவிக்க வேண்டும்.
திவ்யா, ஈரோடு.