தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நாளையும் (திங்கட்கிழமை), வருகிற 17, 18, 19-ந் தேதிகளிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது. மேற்கண்ட நாட்களில் விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந்தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். மேற்கண்ட முகாமில் 1 வயது முதல் 19 வயது வரையில் உள்ளவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், வளர் இளம் பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 273 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளார்கள். குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.