ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஏக்கர் நிலம் அபகரிப்பு; மூதாட்டி புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

ஆள்மாறாட்டம் செய்து மூதாட்டியிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 21:17 GMT
ஈரோடு
ஆள்மாறாட்டம் செய்து மூதாட்டியிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 65). இவருக்கு ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் 2 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை ஈரோடு -கரூர் ரோடு ராஜீவ் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூர்த்தி (53) என்பவருக்கு விற்பனை செய்ய கண்ணம்மாள் முடிவு செய்தார். அதன்படி கண்ணம்மாளின் நிலத்தினை முதல் கட்டமாக ஒரு ஏக்கர் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு மூர்த்தி கிரையம் செய்து கொண்டார். 
இதைத்தொடர்ந்து மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை கண்ணம்மாளுக்கே தெரியாமல், ஆள் மாறாட்டம் செய்து கடந்த 2011-ம் ஆண்டு அரசு நில மதிப்பில் ரூ.10 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். அந்த இடத்தின் அப்போதைய வெளி மார்க்கெட் விலை ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கண்ணம்மாள் கடந்த 2020-ம் ஆண்டு, அவர் விற்பனை செய்யாமல் வைத்திருந்த ஒரு ஏக்கர் நிலத்தினை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வில்லங்க சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
கைது
அதில், கண்ணம்மாளின் மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலமும், மூர்த்திக்கு விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், மூர்த்தி ஆள்மாறாட்டம் செய்து கண்ணம்மாளின் நிலத்தை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மூர்த்தி மீது ஆள் மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த மூர்த்தி தலைமறைவானார். இந்த நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் நேற்று மூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்