ரூ.2-க்கு இட்லி, பூரி விற்பனை செய்யும் மூதாட்டி
விக்கிரமசிங்கபுரம் அருகே ரூ.2-க்கு இட்லி, பூரியை மூதாட்டி விற்பனை செய்கிறார்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவருடைய மனைவி ஆவுடையம்மாள் (வயது 68). இவர் தனது வீட்டின் அருகில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆவுடையம்மாள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மலிவு விலையில் இட்லி, பூரி வியாபாரம் செய்து வருகிறார். தற்போதும் இங்கு இட்லி, பூரி தலா ரூ.2 என்ற குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறார். இவற்றுக்கு சுவையான தேங்காய் சட்னியும், சாம்பாரும் வழங்குகிறார்.
இதனால் காலை, மாலையில் இவரது கடையில் இ்ட்லி, பூரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று இட்லி, பூரி வாங்கி செல்கின்றனர். இவரது கடைக்கு பெயர் பலகை இல்லையென்றாலும், இவரது கடையை ‘அம்மா உணவகம்’ என்றே அப்பகுதியினர் அழைக்கின்றனர். இதுகுறித்து ஆவுடையம்மாள் கூறியதாவது:-
ஏழைகளுக்கு பசியாற்றி உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் லாப நோக்கமின்றி குறைந்த விலையில் இட்லி, பூரி வியாபாரம் செய்து வருகிறேன். அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தாலும், இட்லி, பூரியின் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இனியும் உயர்த்தப்போவது இல்லை. அதிகாலையிலேேய கண்விழித்து அனைத்து பணிகளையும் நானே செய்து விடுவேன். எனது குடும்பத்தினர் உள்பட யாரையும் உதவிக்கு அழைப்பது இல்லை. தினமும் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, வேறு எந்த விழாக்களுக்கும் செல்வது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.