செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்
நாகர்கோவிலில் செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ராமன்புதூர் கோல்டன் தெருவில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அங்கு பணிகள் தீவிரமாக நடந்தது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.