வருகிற 24-ந் தேதி கர்நாடகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்; பா.ஜனதா தலைவர்கள் தகவல்

5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றதன் எதிரொலியாக கர்நாடகத்தில் வருகிற 24-ந் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-03-12 21:03 GMT
பெங்களூரு:

24-ந் தேதி மோடி சுற்றுப்பயணம்

  உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்திருந்தது. இதில், உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் காரணமாக பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றிருப்பதால், கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதுகின்றனர்.

  அதே நேரத்தில் கர்நாடகத்திலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க இப்போதில் இருந்தே தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24-ந் தேதி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது கலபுரகி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சட்டசபை தேர்தலை கருத்தில்...

  பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்தில் வருகிற 24-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாக வில்லை. ஆனால் அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, இங்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கவும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யவும் பிரதமர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதற்கு முன்பும் கலபுரகியில் தான் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவை தோற்கடிக்க திட்டமிட்டு, உமேஷ் யாதவை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.

 அதன்படி, மல்லிகார்ஜுன கார்கே தோற்கடிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக சட்டசபை தோ்தலுக்கான ஏற்பாடுகளை கலபுரகியில் இருந்து தொடங்க பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்