தஞ்சை மாநகரில் இதுவரை 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி

தஞ்சை மாநகரில் 24-வது சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மேயர் சண்.ராமநாதன், இதுவரை 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Update: 2022-03-12 20:35 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரில் 24-வது சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மேயர் சண்.ராமநாதன், இதுவரை 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 23 கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 24-வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் தஞ்சை நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியிலும் 18 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தினர். இதில் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போன்றவை செலுத்தப்பட்டது.
24-வது சிறப்பு முகாம்
தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் இதுவரை முதல் தவணையாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 740 பேருக்கும், 2-வது தவணையாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 473 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியாக 4 ஆயிரத்து 751 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 967 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அதே போன்று அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் உரிய கால கட்டத்தில் தவறாது 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்