ஓட, ஓட விரட்டி, தி.மு.க. பெண் நிர்வாகி கொலை

திருச்சுழி அருகே தி.மு.க. பெண் நிர்வாகி ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2022-03-12 20:30 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே தி.மு.க. பெண் நிர்வாகி ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தி.மு.க. பெண் நிர்வாகி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையானம் பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். அவருடைய மனைவி ராக்கம்மாள் (வயது 52). உடையனாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 
இந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தியும் (32), அவரது மனைவி சோலைமணியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதற்கு காரணம் ராக்கம்மாள்தான் என மூர்த்தி நினைத்து நேற்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்து தகராறு செய்தார். அப்போது, கத்தியால் ராக்கம்மாளை சரமாரியாக குத்தியுள்ளார்.
ஓட, ஓட விரட்டி... 
பின்பு ராக்கம்மாைள ஓட, ஓட விரட்டியும் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு ராக்கம்மாளை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய மூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்