ஆதிகேசவ பெருமாளுக்கு நகைகள் அணிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஆதிகேசவபெருமாளுக்கு நகைகள் அணிவிக்க வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-12 19:44 GMT
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஆதிகேசவபெருமாளுக்கு நகைகள் அணிவிக்க வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பணிகள்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதம் 6- ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சொந்தமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள், ஆபரணங்கள் இருந்துள்ளது. தற்போது வலது பொன் கைக்கூட்டு, வலது பொன் விரல், இடது பொன் அஸ்தம், பொன் கம்பிகள், மாணிக்க மாலை, மரகத மாலை உட்பட பல்வேறு ஆபரணங்கள் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில் கருவூலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மீட்கப்பட்ட 4½ கிலோ தங்கம் ஆபரணங்கள், ஏற்கனவே கருவூலத்தில் உள்ள 1½ கிலோ ஆபரணங்கள் இதில் அடங்கும்.
ஆர்ப்பாட்டம்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாகும்பாபிஷேகத்தின் போது மூலவருக்கு முழு நகையும் அணிவிக்க வேண்டும் என பக்தர்கள் பலமுறை அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுகுறித்து எந்தவித தகவலையும் அறநிலையத்துறை வெளியிடவில்லை.
இதனால் கும்பாபிஷேகத்தின் போது சாமிக்கு நகைகள் அணிவித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் முன்பு விசுவ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கை மனு
ஆர்ப்பாட்டத்துக்கு விசுவ இந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் பத்மகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். திருவட்டார் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சிந்து குத்து விளக்கேற்றினார். ஒருங்கிணைந்த பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி, காளிமலை சேவா சமிதி பொதுச்செயலாளர் சுஜித்குமார், இந்து முன்னணி கோட்ட செயலாளர் சோமன், விசுவ இந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட பலர் பேசினர். முடிவில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளார் கார்த்திக் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்