தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு

Update: 2022-03-12 19:26 GMT
சமயபுரம், மார்ச்.13-
சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படகடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், கடலை, பொரி உள்ளிட்ட பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு கோவிலின் பின்புறம் தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக்கொண்டிருந்த வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 35) என்பவரை கோவில் அதிகாரி இந்த பகுதியில் தள்ளுவண்டி கடை போடக்கூடாது, என்றும் அவரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் கோவிலில் பணியாற்றும் தனியார் பாதுகாவலர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, காவலர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் சற்று நேரத்தில் ராஜகோபுரம் கடை வீதியில் அமைந்துள்ள கோவில் இணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு அலுவலகத்தின் உள்ளே சென்று தீக்குளிக்க முயற்சித்தார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சமயபுரம் போலீசார்  அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்