நன்செய் புகழூர் கதவணையில் சாயக்கழிவு நீர் தேங்கும் அபாயம்

ரூ.490 கோடி செலவில் கட்டப்படும் நன்செய் புகழூர் கதவணையில் சாயக்கழிவு நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு காவிரியாறு பாதுகாப்பு இயக்க நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-12 19:24 GMT
நொய்யல்,
நிர்வாக குழு கூட்டம்
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நஞ்சை புகழூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சுப்பிரமணி, விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயன் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பொருளாதார தடை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 90 டி.எம்.சி. நீரை தேக்கி வைத்து, தமிழகத்தை பாலைவனமாக்க திட்டமிட்டு ரூ.1,000 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள கர்நாடக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழக விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்கிறது. அதைத்தடுக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசிற்கு தமிழக அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
மணல் குவாரி
160 ஆண்டு காலம் அள்ள வேண்டிய ஆற்று மணலை, கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40 அடி ஆழம் வரை காவிரி ஆற்றில் மணல் அள்ளிய நிலையில் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தின் மணல் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்தும், தமிழக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் கோடை காலத்தில் தூர்வாரியும், தமிழகம் தனது மணல் தேவையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
சாயக்கழிவு
நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுக்க சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மழை நீருடன் அவ்வப்போது வருகிறது. இதில் 20 ஆயிரம் டி.டி.எஸ். வரையிலான உப்பு தன்மை உள்ளது. நன்செய் புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்போது ரூ.490 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணையில் சாயக்கழிவு நீர்தேங்கி நிற்கக்கூடிய அபாய நிலை உள்ளது. 
எனவே நொய்யல் ஆற்று சாயக்கழிவு தண்ணீர், நன்செய் புகழூர் கதவணையில் தேங்காதவாறு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை, கதவணை கட்டி முடிக்கும் முன்பே செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்