பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடக்கம்
கந்தம்பாளையம் அருகே பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
நொய்யல்,
கந்தம்பாளையம் அருகே உள்ள அஞ்சல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய 70 பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு சேமிப்பு புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் கோட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி முன்னிலை வகித்தார். அஞ்சலக அதிகாரி பிரபா வரவேற்றார். இதில் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு செல்வமகள் திட்டத்தில் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கரூர் கோட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் பேசுகையில், மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையின் மூலமாக செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம். முன்பு ரூ.1,000 செலுத்தினால் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும் என்று இருந்த நிலையை மாற்றி தற்போது அனைத்து தரப்பு பெண் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் ரூ.250 செலுத்தினாலே இந்த திட்டத்தில் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் கண்டிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் அவர்களின் திருமணத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தில் இணைத்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அஞ்சல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.