லாரிகளில் உரிய படிவம் உள்ளதா
திருவாரூரில் நெல் மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகளில் உரிய படிவம் உள்ளதா என்பது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
திருவாரூர்;
திருவாரூரில் நெல் மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகளில் உரிய படிவம் உள்ளதா என்பது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
நெல்மூட்டைகள்
வெளிமாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொண்டு வந்து அதை டெல்டா மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நெல்லை கொண்டு செல்லும்போது தேவையான விவரங்கள் அடங்கிய டிரான் சீட் என்ற புதிய படிவம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை
இந்த படிவங்கள் இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்ய குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்படி திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கல்பனா, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் நேற்று திருவாரூர் விளமல் கல்பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கை
அப்போது அந்த வழியாக நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரிகளை மறித்து சோதனையிட்டனர். இதில் எங்கிருந்து நெல் மூட்டைகள் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்த டிரான் சீட் என்ற படிவம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனை மீறி வெளி மாவட்ட நெல்லை கள்ளத்தனமாக கொண்டு வந்தால் நெல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.