இளையான்குடியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; கல்லூரி மாணவர் பரிதாப சாவு
இளையான்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.மற்றொருவர் படுகாயம் அடைந்தார்
இளையான்குடி,
இளையான்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர் சாவு
இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 19). இவர் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், கல்லூரி நண்பரான அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் மகன் ஆனந்த்தும் மோட்டார் சைக்கிளில் இளையான்குடி-சிவகங்கை செல்லும் சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ்குமார் இறந்தார்.
வழக்குப்பதிவு
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஆனந்த் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.