3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் நகரில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
நகரின் முக்கிய இடமாக கிரீன்சர்க்கிள் பகுதி திகழ்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தடுக்க கிரீன்சர்க்கிளின் அகலம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள போலீஸ் பூத் அகற்றப்பட்டுள்ளது.
வேலூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.
அன்றைய தினம் வாகன போக்குவரத்து குறைவாக இருக்கும். எனவே முந்தைய நாள் சனிக்கிழமை அன்று பலர் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வார்கள். இதனால் சனிக்கிழமை வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
அதன்படி இன்று மாலை 3 மணி முதல் நகரில் ஏராளமான வாகனங்கள் சென்றது. 5 மணி அளவில் திடீரென கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் திடீரென ஏற்பட்டது.
சந்திப்பு பகுதி என்பதால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் வரும் வாகனங்கள், வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள், காட்பாடியில் இருந்து வேலூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது.
வாகனங்கள் ஊர்ந்து சென்றது
நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்ய திணறினர்.
இதையடுத்து சத்துவாச்சாரி, காட்பாடியில் இருந்து போக்குவரத்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த போக்குவரத்து நெரிசல் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க அதன் அளவை குறைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.