கிணற்றில் குழந்தையுடன் பெண் பிணமாக மிதந்த மர்மம்
ஆற்காடு அருகே பெண் குழந்தையுடன் பெண் பிணமாக கிடந்தார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஆற்காடு
ஆற்காடு அருகே பெண் குழந்தையுடன் பெண் பிணமாக கிடந்தார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய கிணறு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு முப்பதுவெட்டி காலஸ்தியான்பேட்டை பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது.
அந்த கிணற்றில் பெண் குழந்தையும், ஒரு பெண்ணும் பிணமாக மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் அங்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டனர். பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது வாயில் காயங்கள் இருந்தன.
பெண் குழந்தைக்கு 3 வயது இருக்கும். அவர்கள் தாய்-மகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
குடும்ப தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் மர்மம் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரையும் யார் என கண்டுபிடிக்க வேறு ஏதாவது போலீஸ் நிலையங்களில் பெண்-குழந்தை மாயம் என புகார் வந்துள்ளதா என்பது குறித்து பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.