தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2074 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2074 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,074 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஏதுவாக தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐக்கோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி மணிமொழி, மாவட்ட குடும்ப நல நீதிபதி செல்வமுத்துக்குமாரி, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ராஜா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், விபத்து வழக்குகள் தீர்ப்பாய சார்பு நீதிபதி மைதிலி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி, கூடுதல் சார்பு நீதிபதி மோகனரம்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி, விரைவு நீதிமன்ற நீதித்துறை மாஜிஸ்திரேட்டு வனிதா, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் செல்வராஜ், மருது சண்முகம் உள்ளிட்ட நீதிபதிகள் மக்கள் நீதிமன்றத்தை முன்னின்று நடத்தினார்கள். இதில் வக்கீல்கள், வழக்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3,633 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில் 1,976 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு அதற்கான சமரச தொகை ரூ.5 கோடியே 57 லட்சத்து 49 ஆயிரத்து 824-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் வங்கி வாராக்கடன் தொடர்பாக மொத்தம் 473 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு அவற்றில் 98 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 20 லட்சத்து 38 ஆயிரத்து 704-க்கு முடிக்கப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,106 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில் 2,074 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.7 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 528-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.