ஓசூர்: செல்பி எடுக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி
ஓசூர் அருகே செல்பி எடுக்க முயன்ற போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பிளஸ்1 மாணவன் இறந்தான்.
ஓசூர்,
ஓசூர் நேரு நகரை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மகன் நிஷாந்த் (16). இவன், ஓசூர்-பாகலூர் சாலையில் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
நேற்று மாணவன் நிஷாந்தும், உடன் படிக்கும் ஒரு மாணவியும், சைக்கிளில் ஓசூர் அருகே நல்லூர் பகுதிக்கு சென்றனர். அங்கு மஞ்சு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 5 அடி ஆழ தண்ணீர்தொட்டி மீது நின்று அவர்கள் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, நிஷாந்த் தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.