தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி பேக்கரி கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் மோசடி
தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி பேக்கரி கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
கடன் தருவதாக கூறி
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இடையன்சாவடி பகுதியை சேர்ந்தவர் கலிவரதன் மகன் வெங்கடேஷ் (வயது 40), பேக்கரி கடை உரிமையாளர். இவருடைய செல்போன் எண்ணுக்கு தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் பெயரில் 3 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படும் என்று குறுந்தகவல் வந்தது. இதை நம்பிய வெங்கடேஷ், தனது செல்போன் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு ரூ.10 லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறினார். அதற்கு எதிர்முனையில் பேசிய மர்ம நபர், வெங்கடேஷிடம் உங்களுக்கு கடன் ஒப்புதல் ஆகிவிட்டதாகவும், அதற்காக விண்ணப்ப கட்டணம், ஆவண கட்டணம், வங்கி ஊழியர்களின் கமிஷன், இ.எம்.ஐ. ஆகியவற்றுக்காக ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 610-ஐ அனுப்புமாறு கூறினார்.
ரூ.2¼ லட்சம் மோசடி
அதன்படி வெங்கடேஷ், கடந்த 13.1.2022 முதல் 29.1.2022 வரையிலான தேதிகளில் அந்த நபரின் 2 தனியார் வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 610-ஐ தனது செல்போனில் கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அந்த மர்ம நபர், வெங்கடேசுக்கு கடன் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து வெங்கடேஷ், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், முகமதுஅசாருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.