ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம்

ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-03-12 17:11 GMT
திருப்பூர்
ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவன காவலாளி
அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த அர்பிந்து ராய் (வயது 30) என்பவர் எஸ்.3 பெட்டியில் ஏறி பயணம் செய்தார். அவர் ஜோலார்பேட்டை வரை பயணம் செய்ய முன் பதிவு செய்து டிக்கெட் வைத்திருந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக அர்பிந்து ராய் பணியாற்றி வந்தார்.
அவருடன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் அந்த பெட்டியில் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ரெயில் ஜோலார்பேட்டை வந்ததும் அர்பிந்து ராய் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். உடனே அவருடன் பயணம் செய்த வடமாநில தொழிலாளர்கள் அவரை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
திருப்பூர் வந்தது
உடனடியாக அவருடைய செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அர்பிந்து ராயின் சகோதரி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரை தொடர்பு கொண்டு தெரிவித்தபோது அர்பிந்து ராயின் உடலை ரெயில் மூலமாக திருப்பூரில் கொண்டு வந்து இறக்கி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் கம்பளி போர்வையால் அர்பிந்து ராயின் உடலை போர்த்தி அவர் தூங்கிக்கொண்டிருப்பதை போல் செய்து விட்டனர். அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகளுக்கு இந்த விவரம் தெரியவில்லை. அவர்கள் வழக்கம் போல் பயணத்தை தொடர்ந்தனர்.
காலை 10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் எஸ்.3 பெட்டியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், ரெயிலில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரிடம் அர்பிந்து ராய் இறந்து விட்டதை தெரிவித்தனர். உடனடியாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ரெயில் திருப்பூர் வந்ததும் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து, அர்பிந்து ராயின் உடலை தூக்கிக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது தான் அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகளுக்கு கடந்த 4 மணி நேரமாக, சடலத்துடன் பயணம் செய்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடல் ஒப்படைப்பு
பின்னர் நடைமேடையில் உடலை கிடத்தினர். அதற்குள் அர்பிந்து ராயின் உறவினர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில்வே போலீசார் உதவியுடன் உடலை 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அர்பிந்து ராயின் உடலை அவரது உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்