நெக்னாமலை காட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
வாணியம்பாடி அருகே நெக்னாமலை காட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த காட்டுப் பகுதியில் நெக்னாமலை ஊராட்சி மலை கிராமம் உள்ளது. இந்த காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து கொண்டு சென்று மீண்டும் திரும்பி வருபவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் இந்த காட்டுப்பகுதிக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் எரிந்தது.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் வந்து தீயை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தாலும், பல ஏக்கர் காடுகள் தொடர்ந்து இரவு 9 மணி வரை எரிந்தது.
இந்த நிலையில் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட ஆடுகளும், மாடுகளும் மீண்டும் வீடு திரும்பாமல் காட்டுப்பகுதியில் உள்ளதால், அவைகளும் தீயில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்கு தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.