மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட மாநாட்டில் தீர்மானம்
மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்ட மாநாட்டில் தீர்மானம்
விழுப்புரம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் கோட்ட மாநாடு நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குணசேகர், சங்க கொடியை ஏற்றி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஏழுமலை வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் தொடக்க உரையாற்றினார். துணைத்தலைவர் அம்பிகாபதி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் புருஷோத்தமன், திட்ட செயலாளர்கள் சேகர், அய்யப்பன், இணைச்செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரை ஆற்றினார்.
மாநாட்டில், மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கோட்ட செயலாளர் வெங்கடகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சங்கர், அர்ச்சுணன், சத்தியசீலன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.