மக்கள் நீதிமன்றத்தில் ரூ19 கோடியே 65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3269 வழக்குகளில் ரூ19 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரத்து 688ஐ இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-03-12 16:46 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,269 வழக்குகளில் ரூ.19 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரத்து 688-ஐ இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. 

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தலீலா தலைமை தாங்கினார்.

இதில், திருப்பத்தூர் மாவட்டம் பாய்ச்சல் கிராமத்தில் கடந்த 1982, 2012-ம் ஆண்டுகளில் காவலர் குடியிருப்பு மற்றும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க சுமார் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

அதற்கு அரசு சார்பில் போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்று நில உரிமையாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நேற்று தீர்வு காணப்பட்டது. 

நில உரிமையாளர்களுக்கு ரூ.3 கோடியே 91 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
 
அதேபோல் திமிரியை அடுத்த காவனூரை சேர்ந்த இளவழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். 

அவர் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தீர்வு காணப்பட்டு விபத்து இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

ரூ.19 கோடியே 65 லட்சம் இழப்பீடு

அதைத்தொடர்ந்து நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அவற்றில் 3,269 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ.19 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரத்து 688-ஐ இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. 


இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட மற்றும் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.

மேலும் செய்திகள்