சாராயம் விற்ற 3 பேர் கைது
கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, மியாட்மனோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்மலை கிராமத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும், தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆறுமுகம் (வயது 39), ரங்கநாதன்(60) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் கல்வராயன்மலை வெள்ளரிக்காடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து சாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம், ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கோவிந்தராஜை தேடி வருகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தெங்கியாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(34) என்பவரையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மண்மலை, தெங்கியாநத்தம் கிராமத்தில் சாராய விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.