கர்நாடக மேல்-சபை தலைவர் மீது வழக்கு பதிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது வழக்கு பதிந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-03-12 16:04 GMT
பெங்களூரு:

இருபிரிவினர் இடையே மோதல்

  தார்வார் (மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சர்வோதயா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கும், வால்மீகி சமுதாயத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

  இதில் சர்வோதயா கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி களம் இறங்கியதாக கூறப்படுகிறது.

பசவராஜ் ஹொரட்டி மீது வழக்கு

  இதுபற்றி வால்மீகி பிரிவினரைச் சேர்ந்த மோகன் குடசலமணி என்பவர் அளித்த புகாரின்பேரில் தார்வார் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சதாரேயா என்பவர் சர்வோதயா கல்வி நிறுவனத்தினர் மற்றும் மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.

  இதில் பசவராஜ் ஹொரட்டி 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடக மேல்-சபையிலும் எதிரொலித்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பசவராஜ் ஹொரட்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேல்-சபையில் காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும் அமளியிலும் ஈடுபட்டனர்.

பணி இடைநீக்கம்

  இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்ந்து பசவராஜ் ஹொரட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சதாரேயாவை பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சதாரேயாவுக்கு வேறு பணிகள் ஒதுக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்