மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோகனப்பிரியா (23). இவர்களுக்கு 1½ வயதில் கனிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கனிகாஸ்ரீக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கனிகாஸ்ரீ இறந்துபோனது. தனது மகள் இறந்துபோன துக்கம் தாங்காமல் 2 மாதங்களாகவே முருகேசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.