3,219 வழக்குகளில் ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கியதால் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது

3,219 வழக்குகளில் ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கியதால் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது

Update: 2022-03-12 14:31 GMT

கோவை

3,219 வழக்குகளில் ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கியதால் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் ஆகிய நீதிமன் றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல், சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், 5-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் கிரிஷ்ணபிரியா மற்றும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் எம்.எஸ் ரமணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ரூ.20 கோடியே 60 லட்சம்

இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்பம், தொழிலாளர் பிரச்சினை, சமரச வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இதில், 3,219 வழக்குகளில் மொத்தம் ரூ.20 கோடியே 60 லட்சத்து 7 ஆயிரத்து 834 வழங்கி சமரச தீர்வு காணப்பட்டது. மேலும் 3 குடும்ப நல வழக்குகளும் தீர்வு காணப்பட்டது.

இந்த வழக்குகளில் மேல் முறையீடு செய்ய இயலாது. மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தி உள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 

இதனால் வழக்கு தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் பண செலவை தவிர்க்கலாம் என்று சட்ட பணிகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்