நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெறும் 10 இடங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார்.

Update: 2022-03-12 14:25 GMT
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ முகாம்கள்
பொதுமக்கள் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பதற்கான திட்டம் தான் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம். இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம் மொத்தம் 45 மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரை 25 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை மொத்தம் 10 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி நாளை மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மாமுண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் நாச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 17-ந் தேதி நாமக்கல் வட்டாரத்தில் விட்டமநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பரமத்தி வட்டாரத்தில் பில்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மோகனூர் வட்டாரத்தில் என்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், எலச்சிபாளையம் வட்டாரத்தில் பொம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் மின்னக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந் தேதி வெண்ணந்தூர் வட்டாரத்தில் கட்டனாச்சம்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
இதய அறுவை சிகிச்சை
இந்த முகாம்களுக்கு வரும் அனைத்து பொதுமக்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு அனைவருக்கும் உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ரத்த அழுத்த விவரங்களின்படி தேவைப்பட்டால் ஈ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இதய அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு தங்களின் பகுதிக்கு மருத்துவர்களை அழைத்து வந்து மேற்கொள்ளப்படும் வருமுன் காப்போம் திட்ட முகாம்களில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து நல்வாழ்வு பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வருமுன் காப்போம் திட்டத்தினை எடுத்து கூறி, முழு உடல்நலத்தோடு இருப்பதை உறுதி செய்ய தங்கள் பகுதியில் நடைபெறும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்