பள்ளிபாளையத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையின் உடல் கழிவுநீர் கால்வாயில் வீச்சு-போலீசார் விசாரணை
பள்ளிபாளையத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை உடல் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டது. குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிபாளையம்:
பெண் குழந்தை வீச்சு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் அருகே சமயசங்கிலி செல்லும் சாலையோர கழிவுநீர் கால்வாயில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடல் கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை பிறந்து 2 நாட்களே ஆனது என்பது தெரியவந்தது. ஆனால் குழந்தையின் உடலை வீசி சென்றது யார்?, குழந்தை யாருடையது? போன்ற விவரங்கள் தெரியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசி சென்றது யார்?. குழந்தை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா?, அல்லது முறை தவறிய உறவால் பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள வீடு, நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். பள்ளிபாளையத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.