ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை

நாக்பூரில் ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-03-12 14:11 GMT
கோப்பு படம்
நாக்பூர், 
நாக்பூரில் ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
கடத்தல் புகார்
 மராட்டிய மாநிலம் நாக்பூர் காம்ப்டி பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது18). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி அறிந்த சிறுமியின் தாய் கண்டித்து  உள்ளார்.  மேலும் ஆதித்யாவை சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தார். 
 இந்த நிலையில் சிறுமியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்த ஆதித்யா தன்னை சந்திக்க வரும்படி கேட்டுள்ளார். சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் சென்று விட்டார். இதனால் பெற்றோர் தனது மகளை கடத்தி சென்றதாக நியூ காம்ப்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
 இதற்கிடையில் அஜ்னி கிராமம் கான்ஹான் நதி மேம்பாலத்தின் கீழே தண்டவாளத்தில் இளம்ஜோடியின் சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி மற்றும் காதலன் ஆதித்யா என்பது தெரியவந்தது. 
 பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த காதல் ஜொடி, சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது ஹவுரா-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் காதல் ஜோடி மீது மோதியுள்ளது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்