மாயமான தொழிலாளி மர்மச்சாவு; தூக்கில் தலை மட்டும் தொங்கியபடி கிடந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலையில் மாயமானதாக கூறப்பட்ட தொழிலாளி மர்மான முறையில் உயிரிழந்தார். தூக்கில் தலை மட்டும் தொங்கியபடி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-03-12 13:31 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாயமானதாக கூறப்பட்ட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். தூக்கில் தலை மட்டும் தொங்கியபடி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 விவசாய கூலித்தொழிலாளி

திருவண்ணாமலை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 60). இவருக்கு 2 மனைவிகள். 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர் ஆடு, மாடுகளை வளர்த்தும், விவசாய கூலி வேலையும் செய்து வந்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

மணியின் வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை
 பொன்னுசாமி நகரில் முனிஸ்வரன் கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் மேய்ப்பது வழக்கம். 

இந்த நிலையில் மணியின் பேரன் காமராஜ், முனிஸ்வரன் கோவில் அருகில் மாடுகளை மேய்ச்சலுக்கு கட்ட வந்துள்ளார். 

அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதருக்குள் சென்று உள்ளார். அங்கு மரத்தில் கயிற்றில் மனித தலை மட்டும் தொங்கிய நிலையில் கிடந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

 போலீஸ் விசாரணை

பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து பல நாட்களான நிலையில் தலை மட்டும் கயிற்றில் தொங்கிய படியும் மற்ற பாகங்கள் எலும்புகளாக அதன் அருகில் கீழே கிடந்து உள்ளது. 

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மாயமான மணியின் மோதிரம், பர்ஸ் மற்றும் ஆடைகள் இருந்து உள்ளது. 

இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு வந்து அதனை பார்த்து உயிரிழந்து கிடப்பது மணி என்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தலை மற்றும் எலும்புகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்