வார்டு கவுன்சிலரின் கணவர் நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு

குடியாத்தத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து ஊராட்சி வார்டு கவுன்சிலரின் கணவர் நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-12 13:12 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து ஊராட்சி வார்டு கவுன்சிலரின் கணவர் நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூடநகரம் ஊராட்சி 8-வது வார்டை சேர்ந்தவர் மைனுத்தின் (வயது 37). இவர், குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

 இவரின் மனைவி ரேஷ்மா. கூடநகரம் ஊராட்சி 8-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். 

மைனுத்தின் குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்து போராடும் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், இதுெதாடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி இன்று காலை 8.30 மணியளவில் குடியாத்தம் அர்ஜுனமுதலி தெருவில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் போலீசாரும், வருவாய்த்துறையினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குண்டுக்கட்டாக தூக்கி...

ஆனால் அவர், போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடர்ந்தார். 

இதையடுத்து போலீசார் மைனுத்தினை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். 

அப்போது அவர், நான் கூறும் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம்பிரதீஷ், கூடநகரம் ஊராட்சி மன்ற தலைவர் குமரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் இஸ்மாயில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் பிரச்சிைன இல்லை

அப்போது மைனுத்தின் சிலர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது, எனத் தெரிய வந்தது. 

கூடநகரம் 8-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை என்றும் தெரிய வந்தது.

 வருங்காலத்தில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். 

இதையடுத்து பல மணி நேரம் நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். 

மைனுத்தினை போலீஸ் நிலையத்தில் இருந்து அனுப்பி ைவத்தனர்.
------

மேலும் செய்திகள்