சுற்றுலா பயணிகளை கவர கோரிசோலா அணை பூங்கா, இசை நீரூற்று அமைக்க திட்டம்
ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவர கோரிசோலா அணை பூங்கா, இசை நீரூற்று உள்பட 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
ஊட்டி
ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவர கோரிசோலா அணை பூங்கா, இசை நீரூற்று உள்பட 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மேம்பாடு
நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தோட்டக்கலை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களுக்கு புதிய சுற்றுலா தலங்களை ஏற்படுத்தி வருகையை அதிகரிக்கவும் மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊட்டியில் 3 புதிய சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கோரிசோலா அணை பகுதியை பூங்காவாக மாற்றி, நீர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு படகுகள் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ரூ.15 கோடி மதிப்பில் கோரிசோலா அணையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு சூழ்ந்து காணப்படும் புதர்களை அகற்றி பசுமையான பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இசை நீருற்று
இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறியதாவது:- ஊட்டி பட்பயர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ரூ.32 கோடி மதிப்பில் இசை நீரூற்று அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக நீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, வண்ண விளக்குகளுடன் இசை நீருற்று அமைக்கப்பட இருக்கிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. முக்கிய பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
அதேபோல் ஊட்டியில் பிரம்மாண்ட கண்ணாடிகள் கொண்ட வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன் நடுவே நடந்து சென்று மீன்களை கண்டு ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோரிசோலா அணையில் புதிய சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்காக கோடப்பமந்து, தலையாட்டுமந்து பகுதிகளில் இருந்து அணைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தொட்டபெட்டா சுற்றுலா தலத்தை கண்டு ரசித்து விட்டு புதிய சுற்றுலாவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியும். 3 புதிய திட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவம் கிடைப்பதோடு, வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.