மாவட்ட அளவிலான கால்பந்து டிவிசன் லீக் போட்டி தொடக்கம்

கோத்தகிரியில் முதல் முறையாக மாவட்ட அளவிலான கால்பந்து டிவிசன் லீக் போட்டி தொடங்கியது.

Update: 2022-03-12 13:08 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் முதல் முறையாக மாவட்ட அளவிலான கால்பந்து டிவிசன் லீக் போட்டி தொடங்கியது.

கால்பந்து போட்டி

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான ஏ, பி, சி ஆகிய 3 டிவிஷன் போட்டிகள் ஊட்டி எச்.ஏ.டி.பி மைதானம், சாந்தி விஜயா பள்ளி மைதானத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகளில் பங்கேற்க நீண்ட தொலைவில் இருந்து வீரர்கள் வாகனங்கள் மூலம் சென்று விளையாடி வந்தனர்.

எனவே விளையாட்டு வீரர்களின் வசதியை கருத்தில் கொண்டு டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாடும் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த அணிகளுக்கான போட்டிகளை கோத்தகிரி பகுதியிலும், கூடலூர் பகுதியைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகளை கூடலூரிலும், மற்ற போட்டிகளை ஊட்டியிலும் நடத்த நீலகிரி கால்பந்து கழகம் முடிவு செய்தது.

கோத்தகிரியில் தொடக்கம்

இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கோத்தகிரியில் நடத்தப்படும் நடப்பண்டிற்கான 'சி' டிவிஷன் லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில்  தொடங்கியது. 

முதல் போட்டியில் கோத்தகிரியை சேர்ந்த ரிவர்சைடு அணி மற்றும் ஜக்கனாரை அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் 2-1 என்கிற கோல்கள் கணக்கில் ரிவர்சைடு வெற்றி பெற்றது.

2-வது போட்டி நீலகிரி எப்.சி. அணிக்கும், கெந்தொரை விங்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் 3-0 என்கிற கோல்கள் கணக்கில் நீலகிரி எப்.சி. அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஜெகதளா மற்றும் அணிக்கொரை அணிகளுக்கும், பி.எம்.எஸ்.சி மற்றும் காஸ்மோஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு பிறகு கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நீலகிரி எப்.சி. மற்றும் ரிவர்சைடு அணிகள், ஆலான் மாக்ஸ் மற்றும் அணிக்கொரை அணி, ஊட்டி சிட்டி மற்றும் இளைய பாரதம் அணி, நீலகிரி பைசன் மற்றும் பி.எம்.எஸ்.சி. அணிகள் பங்கேற்கும் 4 போட்டிகள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்