மக்கள் நீதிமன்றத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு
மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மன்னார்குடி;
மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
மன்னார்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. குடும்ப நல நீதிபதி விஜயகுமார், சார்பு நீதிபதி பிரேமாவதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைவாணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மொத்தம் 348 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்ட அதில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.1 கோடியே 64 லட்சத்து 84 ஆயிரம் தீர்வு தொகையாக பெறப்பட்டது. முடித்து வைக்கப்பட்ட வழக்குகளில் 3 வருட காலமாக நிலுவையில் இருந்த குடும்ப நல வழக்கு ஒன்றை நீதிபதிகள் சமரசமாக பேசி கணவன்- மனைவியை சேர்த்து வைத்தனர்.
ரூ.17½ லட்சம்
மேலும் மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி உத்தரவிடப்பட்டது. மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர். இதில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாகி வக்கீல் கலையரசி, அரசு வக்கீல் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.