உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்த விசைப்படகு பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்த விசைப்படகை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-03-12 19:00 GMT
நாகப்பட்டினம்:-

உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்த விசைப்படகை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்திய கடற்படையினர் ரோந்து

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் இருந்து மின்பிடிக்க கடலுக்கு சென்ற ஒரு விசைப்படகை நிறுத்தி, அதில் இருந்த மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்தது. 
மேலும் படகுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும், அந்தப்படகில் இருந்த 9 மீனவர்களில் 7 பேரிடம் அடையாள அட்டை இல்லாததும், மீன்பிடிப்புக்கு செல்ல மீன்வளத்துறையின் அனுமதி பெறாததும் தெரியவந்தது. 

படகு பறிமுதல்

இதையடுத்து இந்திய கடற்படையினர் அந்த படகை பறிமுதல் செய்து நாகை கடற்படை முகாம் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை நாகை மாவட்ட மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீன்வளத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த விசைப்படகு திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த கலைவாணனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 
இருப்பினும் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவரிடம் இருந்து வாங்கிய அந்த படகுக்கு இதுவரை பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த படகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மீன்வளத்துறையினர், 9 பேரையும் விடுவித்தனர்.

அபராதம்

இது குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் கூறுகையில், ‘படகின் தற்போதைய உரிமையாளராக கூறப்படும் திருமுல்லைவாசல் கலைவாணனை விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் படகை இயக்கியது, மீன்வளத்துறை அனுமதி இன்றியும், அடையாள அட்டை இல்லாமலும் மீன்பிடிக்க சென்றது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ் படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்