கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி
கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:-
கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆலிவர் ரெட்லி ஆமைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாப்பார்கள்.
55 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு பிறகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவை கடலில் விடப்படும். அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன.
கடலில் விடப்பட்டன
கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 1982-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வனத்துறையின் மூலம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் ஆமை மூட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டன.
இந்த நிலையில் 313 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி கோடியக்கரையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் அயூப்கான், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், உப்பு நிறுவன மேலாளர் சுந்தர்ராஜ், கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் மற்றும் வனவர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.