செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Update: 2022-03-12 11:18 GMT
சென்னை,  

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் இருக்கிறது. நேற்று மதியம் வாலிபர் ஒருவர் திடீரென இந்த செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். கைகளை அசைத்தும், கூச்சலிட்டபடியும் இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில் பயணிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் எதையும் கேட்காமல், கீழே குதிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த வாலிபர் தானாகவே கீழே இறங்கி வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை செய்து வரும் அந்தோணி(வயது 35) என்பது தெரியவந்தது. குடிபோதையில் தனது சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரியமேடு போலீசார் அந்தோணியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்