நாட்டு வெடி வெடித்து பசுமாட்டின் வாய் சிதைந்தது
ரிஷிவந்தியம் அருகே காட்டு பன்றியை பிடிக்க வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து பசுமாட்டின் வாய் சிதைந்தது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் செந்தில்முருகன் (வயது 33). இவர் தனது பசுமாட்டை அதே கிராமத்தை சேர்ந்த வேலுமயில் கரும்பு வயல் வரப்பு ஓரம் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் மாட்டின் வாய் பகுதி சிதைந்து ரத்தம் கொட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் சென்று பார்த்த போது, அது நாட்டு வெடி என்று தெரிந்தது. நாட்டு வெடியை புல்லோடு சேர்த்து மாடு கடித்ததும், அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததும் தெரிந்தது. இது பற்றி செந்தில்முருகன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
கைது
விசாரணையில், மேமாளூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி (61) என்பவர் காட்டுப்பன்றி பிடிப்பதற்காக வரப்பில் நாட்டு வெடி வைத்தது தெரிந்தது. இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர். இருப்பினும் நாட்டு வெடியை கடித்து மாட்டின் வாய் சிதைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.