தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-11 23:23 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட்டம், தலைவி தமிழ்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், செயலாளர் உமாசங்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் கனிமொழி (தி.மு.க.) பேசுகையில், ‘கடந்த முறை கூட்டம் நடத்தப்பட்டு நாங்கள் கையெழுத்து போட்ட பின்னர் கூடுதலாக 7 தீர்மானங்களை எங்களுக்கு தெரியாமல் சேர்த்துள்ளனர். 4 வார்டுகளில் மாநில அரசின் நிதி ரூ.1 கோடியே 94 லட்சத்தில் கிணறுகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களிடம் அனுமதி பெறாமல் தீர்மானத்தை எப்படி சேர்த்தீர்கள்?’ என்று ஆவேசமாக பேசினார். அவருக்கு ஆதரவாக துணை தலைவர் உதயகிருஷ்ணனும் (காங்கிரஸ்) பேசினார். அப்போது கவுன்சிலர் சாக்ரடீஸ் (தி.மு.க.), ‘கூட்டத்தை சுமுகமாக நடத்த வேண்டும்’ என்றார். இதனால் கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் நடந்தது.

பின்னர் தலைவி தமிழ்செல்வி பேசுகையில், ‘இதில் எந்த தவறும் நடைபெறவில்லை. கடந்தமுறை நடந்த கூட்டத்தில் பொருட்குறிப்பு வைக்கப்பட்டு, அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். இப்போது தீர்மானங்களை இடையில் சேர்த்ததாக கூறுவது தவறானது. அனைத்து வார்டுகளுக்கும் நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்’ என்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏற்கனவே மத்திய அரசின் நிதி ரூ.2 கோடியே 74 லட்சம் அனைத்து வார்டுகளுக்கும் திட்டப் பணிகளுக்காக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் நிதி ரூ.1 கோடியே 94 லட்சம் 4 வார்டுகளுக்கு கிணறு தோண்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த கூட்டத்தில் வைக்கப்பட்டு அதில் கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டுள்ளனர். இப்போது எங்களுக்கு தெரியாமல் தீர்மானம் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். மினிட் புத்தகத்தில் இடையில் எந்த பேப்பரும் சேர்க்க முடியாது. இங்கு அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும்’ என்று கூறினார். 

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்செல்வி, கனிமொழி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்