நிலத்தரகர் கொலையில் கணவன் - மனைவி உள்பட 4 பேர் கைது

நெல்லை அருகே நடந்த நிலத்தரகர் கொலையில் கணவன் - மனைவி உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-11 22:17 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ் செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 40), நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வைகுண்டத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொலையான வைகுண்டம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ஒரு கொலை முயற்சி வழக்கில் வைகுண்டம் கோர்ட்டில் சாட்சி கூறுவது தொடர்பாக அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வைகுண்டம் நேற்று முன்தினம் கோர்ட்டில் சாட்சி கூற திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, வைகுண்டத்தின் உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலை தொடர்பாக பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த விவசாயியான ராஜன் (67), பாபு (37), ராஜன் மனைவி லீலா (57), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (54) ஆகிய 4 பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையின் முடிவில் தான் வைகுண்டம் கொலை செய்யப்பட்டதற்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு நேற்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்