பெங்களூரு அருகே துணிகரம் தமிழக நகை வியாபாரியை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை

பெங்களூரு அருகே தமிழக நகை வியாபாரியை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட துணிகரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

Update: 2022-03-11 22:14 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே தமிழக நகை வியாபாரியை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட துணிகரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக நகை வியாபாரி

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஜோசப். நகை வியாபாரி. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி, ஜோசப்பிடம் இருந்து 2½ கிலோ தங்கத்தை வாங்கியதாக தெரிகிறது. இதற்காக அந்த வியாபாரி ரூ.1 கோடி கொடுக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அந்த ரூ.1 கோடியை கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி ஜோசப்பிடம் கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து தார்வார் மாவட்டத்திற்கு ஜோசப் காரில் சென்று இருந்தார். பின்னர் உப்பள்ளியில் வைத்து வியாபாரியை சந்தித்து ரூ.1 கோடி வாங்கினார். அந்த பணத்தை தனது காரில் வைத்துக் கொண்டு உப்பள்ளியில் இருந்து பெங்களூரு வழியாக தமிழ்நாட்டிற்கு ஜோசப் காரில் புறப்பட்டார். பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாத நாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாதவரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 7 மணி அளவில் ஜோசப் கார் சென்று கொண்டிருந்தது.

ரூ.1 கோடி கொள்ளை

அப்போது மற்றொரு காரில் வந்த 8 பேர் கும்பல் ஜோசப் காரை வழிமறித்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி ஜோசப், அவருடன் இருந்த நபர்களை மிரட்டி ரூ.1 கோடி மற்றும் காரையும் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்கள். இதுகுறித்து மாத நாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஜோசப் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்