கொடுமுடி ஒன்றிய குழு கூட்டம்: அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கொடுமுடி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-03-11 21:47 GMT
ஊஞ்சலூர்
கொடுமுடி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 
கோரிக்கை
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழுவின் அவசரக் கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழுத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா (பொது), வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தீர்மானங்கள் மன்ற அங்கீகாரம் பெறுவதற்காக படிக்கப்பட்டன. ஒன்றிய செலவினங்கள் குறித்து படிக்கப்பட்டபோது அதற்கான ஆவணங்களை மன்றத்தில் காட்டு்மாறு 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி (தி.மு.க.) ஒன்றிய குழுத்தலைவர் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவிடம் (பொது) கோரிக்கை வைத்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் கையொப்பம் இல்லாத ஜெராக்ஸ் பேப்பர் கொடுக்கப்பட்டது.
புறக்கணிப்பு
பின்னர் உறுப்பினர்கள், இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கையொப்பம் இட்டதை காட்டுங்கள் என்ற கோரிக்கையை வைத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா, எனது மேலதிகாரிகளுக்கு மட்டுமே எனது கையொப்பம் இட்டதை கொடுப்பேன் என்று கூறினார். உடனே 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி, 2-வது வார்டு கவுன்சிலர் எம்.ஏ.பழனிசாமி (கொ.ம.தே.க.), 4-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம் (அ.தி.மு.க.), 5-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி (அ.ம.மு.க.) மற்றும் ஒன்றிய குழுத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் (தி.மு.க.) ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இதனால் ஒன்றிய குழு துணைத்தலைவர் ப்ரீத்தி செந்தில் மட்டும் கூட்ட அரங்கின் உள்ளே இருந்தார். மேலும் இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் லட்சுமி ராஜேந்திரன் மற்றும் 4 கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஒரு மனு கொடுத்தனர். அந்தமனுவில், ‘ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்கும் ஆவணங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மன்ற கூட்டத்தில் காட்ட மறுக்கின்றார்’ என்று கூறப்பட்டு் இருந்தது.

மேலும் செய்திகள்